வட மாகாணப் பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், காரைநகர்ப் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய பண்பாட்டுப் பெருவிழா – 2026, 2026.09.22 ஆம் திகதி காரைநகர் இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கலாசாரப் பேரவைத் தலைவரும், பிரதேச செயலாளருமான திருவாட்டி. நவரத்தினம் ரஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைநகர்க் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மேனாள் தலைவர் பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் அவர்களும், வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்சன் அவர்களும் கலந்துகொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கிருஸ்ணானந்தன் மாலினி, இளங்கலைஞர் திரு. சற்குணநாதன் சத்தியராஜ் மற்றும் முதுகலைஞர் திரு. தி. திருநாவுக்கரசு பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பண்பாட்டுப் பெருவிழா, வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய பேரிகைகளில் ஒன்றான, காரைநகர் பிரதேசத்திற்கே உரித்தான பேரிகை முழக்கத்துடன், சந்திரப்பிரியன் குழுவினரின் மங்கல வாத்தியமும் இணைந்து ஒலிக்க, சிறப்பாக ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து சத்தியன் குழுவினரின் குதிரையாட்டமும், அத்தி நடனக் கலைமன்ற அங்கத்தவர்களின் கரகாட்டம் மற்றும் வேடப்புனைவுகள் இடம்பெற்றதுடன், கலாசார மத்திய நிலையம் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி உள்ளிட்ட பல்வேறு கலை ஆற்றுகைகளும் இடம்பெற்றதுடன், எமது பிரதேச பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பொது அமைப்புக்களினால் ஊர்திகளும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வலந்தலை வளைவிலிருந்து அழைத்து வரப்பட்டு, இடையே மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று, அம்மனின் அருட்கடாட்சங்களைப் பெற்ற பின்னர் இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மங்கல விளக்கேற்றும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பிரதேச கலைஞர்களால் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. கலாசார பேரவைப் பொருளாளர் திரு. தி. பிரபாகரன் அவர்களால் “கதிரமலை அருமைநாயகம் அரங்கு” திறப்புரை நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கிழவன்காடு கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் குழு இசை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து உதவிப் பிரதேச செயலாளர் திரு. பா. முகுந்தன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பண்பாட்டுப் பெருவிழாவில் அத்தி நடனக் கலைமன்ற கலைஞர்களின் பக்திப் பாடல்கள், கலைஞர் சி. பிரசாந்தன் அவர்களின் நாட்டிய நிருத்தியம், கலாசார மத்திய நிலைய மாணவர்களின் கிராமியப் பாடல்கள் மற்றும் ஒயிலாட்டம், பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கிராமியக் கதம்பம் மற்றும் தெய்வீக கானங்கள், திருநாவுக்கரசு நுண்கலை மன்ற மாணவர்களின் வாத்திய சங்கமம், இலவசக் கல்வி இளையோர் அமைப்பின் மாணவர்களால் நமது பண்பாட்டுப் பாரம்பரியங்கள் மறைந்து போவதற்கான காரணங்களை எடுத்துக்காட்டும் குறியீட்டு நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
பண்பாட்டுப் பெருவிழாவின் பிரதான அம்சமான “கலைமுகை” மற்றும் “கலைஞானச்சுடர்” விருதுகள் வழங்கும் நிகழ்வு விழாவின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
இவ்வருடம் காரைநகர் பிரதேசத்தின் நடனக் கலைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி திருமதி ரா. சிவநிறஞ்சனா அவர்களுக்கும், ஓவியக் கலைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி திரு. தி. திருக்குமரன் அவர்களுக்கும் கலைமுகை விருது வழங்கப்பட்டது.
அதேவேளை, கிராமியக் கலைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி திரு. நடராசா தங்கராசா அவர்களுக்கும், நாடகத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையைப் பாராட்டி திரு. இரத்தினம் தவராசா அவர்களுக்கும் கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
சிறப்பு விருந்தினர் பேராசிரியர் கிருஸ்ணபிள்ளை விசாகரூபன் அவர்கள் உரையாற்றுகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் காரைநகர் பிரதேசத்தின் கலை கலாசாரப் பண்பாட்டினை பிரதிபலிப்பதாகவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பிரதம விருந்தினர் உயர்திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தனது உரையில் எமது கலை, கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அடுத்த தலைமுறையினருக்கு கையளிப்பதற்கான ஒரு வழிவகையாகவே இப்பண்பாட்டுப் பெருவிழா இன்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. அத்துடன் காரைநகர்ப் பிரதேசத்தின் கலை வடிவங்கள் ஊர்வலத்துடனும், ஊர்திப் பவனியுடனும் மற்றும் மேடை நிகழ்வுகள் மூலமும் ஆற்றுகைப்படுத்தப்பட்டிருந்தமையை அவதானிக்கக்கூடியதாவும், அழைப்பிதழ் வடிவமைப்பிலிருந்து விழாவிற்கு அழைத்த முறைகூட தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இருந்ததாகவும், அரங்க, மண்டப அலங்காரங்கள் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளமை மிகவும் சிறப்பானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதேச மட்ட கலைமன்றங்களுக்கு இடையிலான கலை ஆக்கப் போட்டிகள் மற்றும் தேசிய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த வருடப் பண்பாட்டுப் பெருவிழாவில் உள்ளூர் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வருடப் பண்பாட்டுப் பெருவிழாவில் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், விற்பனையும் இடம்பெற்றது.
காரைநகர் பிரதேசத்தின் பாரம்பரியக் கலை வடிவங்களையும், உள்ளூர் கலைஞர்களின் திறமைகளையும் பல்வேறு வடிவங்களில் வெளிக்கொண்டு வந்துள்ள இவ்வருட பண்பாட்டுப் பெருவிழா, காரைநகரின் பண்பாட்டு மரபையும் கலை வளத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்தது.
இந்நிகழ்வு கலாசார உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் இனிதே நிறைவடைந்தது





















